குசல் பெரேராவுக்கு ஐ.பி.எல். தொடரில் வாய்ப்பு
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணி வீரர் ஒருவருக்கு அழைப்பு வந்திருப்பதாக தற்போது பரவலான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சன்ரைசஸ் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் இவ்வருட ஐ.பி.எல். தொடரிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பதிலாக இலங்கை அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சன்ரைசசஸ் ஹைதராபாத் நிர்வாகம்,
“ஆம். நாம் டேவிட் வோர்னருக்கு பதிலாக இலங்கை அணியின் குசல் பெரேராவை அணியில் விளையாட வேண்டும் என அழைத்துள்ளோம். குசல் பெரேரா, டேவிட் வோர்னரை போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர். கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இதனால் நாம் அவரை தெரிவுசெய்தோம். எனினும் அவர் விளையாடுவாரா? இல்லையா? என இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள நான்கு மாகணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு குசல் பெரேரா தயாராகி வருகின்றார். இதனால் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் குசல் பெரேரா இணைந்து எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் அவர் இவ்வருட ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா? என்பது அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குசல் பெரேரா இதுவரையில் 34 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடி 10 அரைசத்தங்கள் அடங்கலாக 1020 ஓட்டங்களை விளாசியுள்ளார். இறுதியாக நடைபெற்ற சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 3 அரைச்சதங்களை விளாசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.