தமிழர்களால் மறக்க முடியாத அந்தக் காலம்
விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர் தமிழர்களின் அனைத் துச் செயற்பாடுகளும் அடியோடு மாறிவிட்டன. சமூகப் பழக்கவழக்கங்கள் மட்டுமல்லாது அரசியலிலும் தனிநபர்கள் மத்தியிலும் மாற்றத்தைக் காண முடிகின்றது. விடுதலைப் புலிகள் தமக்கென ஒரு தனியான அரசியல் பிரிவைக் கொண்டிருந்தனர்.
இதற்குப் பொறுப்பாகவும் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தேர்தல்களில் இவர்கள் போட்டியிடுவதில்லை. இதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழர்களின் அரசியல் நீரோட்டத்தில் கலந்திருந்த முக்கியமான அரசியல் கட்சிகள் யாவும் இதில் இணைந்து கொண்டன. விடுதலைப் புலிகளின் வழிகாட்டலின்கீழ் செயற்படவும் செய்தன.
ஆனால் இன்று கட்டுப்படுத்துவார் எவருமில்லாத நிலையில் ஒவ்வொருவரும் தத்தமது எண்ணம் போன்று செயற்பட்டு வருகின்றனர்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த விடுதலைப் புலிகள்
1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை முழுமையாக எதிர்க்கவே செய்தனர். அந்த ஒப்பந்தத்தின் மூலமாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு மாகாண சபைகளுக்கான தேர்தலும் இடம்பெற்றது.
ஆனால் இதற்கும் விடுதலைப் புலிகள் உடன்படவில்லை. தனி ஈழத்தை மட்டுமே தமது இலட்சியமாகக் கொண்டு போராடிய அவர்கள் மாகாண சபையின் கீழான ஆட்சியை வெறுத்து ஒதுக்கினர். அவர்களுக்குப் பிறகு வடக்குக் கிழக்கில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
வடக்கும் கிழக்கும் முன்னர் இருந்ததைப் போன்று வெவ்வேறு மாகாணங்களாக ஆக்கப்பட்டன. வடக்குக்கும் கிழக்குக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் இடம்பெற்றன.
ஆனால் கிழக்கு மாகாண சபையில் தமிழர்கள் ஒரு பங்காளிகளாகவே இருக்க முடிந்துள்ளது. முதலமைச்சர் பதவி அவர்களை விட்டுத் தூர விலகிச் சென்றுவிட்டது. வடக்கு மாகாணத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்த போதிலும் முக்கியமான அதிகாரங்களை அது கொண்டிருக்கவில்லை.
தமிழர்கள் அரசியல் ரீதியாகப் பிளவுபட்ட நிலையில் காணப்படுகின்றனர். ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து நின்று பதவிகளைத் தேடி அலைவதே இவர்களின் வேலையாகிப் போய்விட்டது.
பதவிவெறி பிடித்தலையும் எம்மவர்கள்
பதவி வெறி பிடித்தவர்கள் எதையுமே சிந்திக்க மாட்டார்கள். இங்கு இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. உள்ளூராட்சித் தேர்தல்கள் இடம்பெறுமென அறிவித்தல் வெளியானதும் கூட்டணி அமைப்பதிலும், புதிய கட்சிகளை அமைப்பதிலும் எம்மவர்கள் முழுமூச்சுடன் செயற்பட ஆரம்பித்து விட்டனர். கூட்டமைப்பிலிருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.எப், கஜேந்திரகுமாரது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யுடன் இணைந்துவிட்டது.
இந்தக் கூட்டணியில் வேறு சில உதிரிகளும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. இதேவேளை அரசியல் கலப்புக்கு இடமே இல்லையெனக் கூறிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை இன்று தடம்புரண்ட நிலையில் காணப்படுகின்றது.
பேரவையில் அங்கம் வகிக்கின்ற அரசியல்வாதிகள், அமைப்புக்கள், தனிநபர்கள் அரசியலில் ஈடுபடுவதைப் பேரவை தடுக்காதென வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதியதொரு வியாக்கியா னத்தை அளிக்கும் அளவுக்குப் பேரவையின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.
அரசியலில் ஈடுபடக் கூடாதென எவருக்கும் எவராலும் கட்டளை பிறப்பிக்க முடியாது. ஆனால் பேரவை அமைக்கப்பட்டபோதே விக்னேஸ்வரன் அதன் அரசியல் நடவடிக்கை தொடர்பாகக் கூறியிருந்தால் பிரச்சினை எழுந்திராது.
உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிராக
களமிறங்கும் தரப்புக்கள்
களமிறங்கும் தரப்புக்கள்
தற்போது கூட்டமைப்புக்கு எதிராகப் பேரவை செயற்படப் போகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கூட்டமைப்புக்கு எதிராக அதில் அங்கம் வகிப்பவர்கள் களமிறங்கப் போகின்றனர். இதைவிட தமிழ் அரசுக் கட்சியுடன் முரண்பட்ட சிலர் அதிலிருந்து பிரிந்து புதிய கட்சியொன்றை அமைக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இவர்கள் தேறுவார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மக்களின் ஆதரவை முற்றாகவே இழந்து நிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிவழியில் செல்லுமா? அல்லது பேரவையின் வழியில் செல்லுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் மக்களுக்குப் பூரணமான பாதுகாப்பு வழங்கப்பட்டது. இரவு வேளையிலும் வீடுகளின் கதவுகளை மூடாமல் வைத்திருக்க முடிந்தது. பெண்கள் எவ்வித அச்சமுமின்றி இரவிலும் கூட தனித்து வெளியில் சென்றுவர முடிந்தது.. திருட்டு, கொள்ளை என்ற பேச்சுக்கே அன்று இடமிருக்கவில்லை.
அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டனர். போரைப் பற்றிய பீதியும் பொருளாதாரக் கஷ்டங்களும் இருந்த போதிலும் மக்களால் அமைதியாக வாழ முடிந்தது. ஆனால் இன்றோ கொலை, கொள்ளை, திருட்டு, வாள்வெட்டு, பெண்கள் மீதான வன்கொடுமைகள் ஆகிய எல்லாமே மலிந்து போய்விட்டன. மக்கள் செய்வதறியாத நிலையில் விழி பிதுங்கிப் போய்க் கிடக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் நினைவு அடிக்கடி இவர்களது மனங்களில் எழுந்து நிற்கின்றது. அவர்களின் மீள் வருகையை நியாயப்படுத்துகின்ற மன நிலையும் கூடவே எழுகின்றது. ஆனால் அந்தக் காலம் திரும்பப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
